Published : 17 Apr 2021 09:12 am

Updated : 17 Apr 2021 09:43 am

 

Published : 17 Apr 2021 09:12 AM
Last Updated : 17 Apr 2021 09:43 AM

மாபெரும் கலைஞனே; நகைச்சுவை சகாப்தமே.. விவேக் மறைவால் துடிக்கும் திரையுலகப் பிரபலங்கள்

celebrities-in-shock-for-vivek-demise

சென்னை

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.


விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விவேக்கின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:

எஸ்.ஜே.சூர்யா: மாபெரும் கலைஞனே, மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கிறது?

சமந்தா: எவ்வளவு பெரிய இழப்பு. அதிர்ச்சியில், சோகத்தில் இருக்கிறேன்

கெளதம் கார்த்திக்: என்னால் இதை நம்பமுடியவில்லை. அவர் நம்மை சிரிக்க வைத்தார். அவரது நடிப்பு மூலம் நமக்கு அறிவூட்டினார். இந்த உலகத்துக்காக அக்கறை காட்டினார். அதை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார். உங்களைப் போல இன்னொருவர் இனி கிடையாது சார். உங்கள் இழப்பை நாங்கள் உணர்வோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

தேவி ஸ்ரீ பிரசாத்: ஆண்டவா. என்னால் நம்பமுடியவில்லை.மூத்த நடிகர் விவேக் மறைந்து விட்டார் என்கிற செய்தியைக் கேட்டு விழித்தேன். மனமுடைந்துவிட்டேன். நம் காலகட்டத்தில் இருந்த மிகச்சிறந்த நகைச்சுவையாளர். தனது நகைச்சுவையில் எப்போதும் சமூகத்துக்கான செய்தியைச் சேர்த்தவர். எங்கள் நெஞ்சில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்.

அஜய் ஞானமுத்து: நொறுங்கிப் போனேன். நமது காலகட்டத்தின் மிகச்சிறந்த நகைச்சுவையாளர் மறைந்து விட்டார் என்பதைக் கேட்டு மனமுடைந்து போவேன். உங்கள் இழப்பை என்றும் உணர்வோம் விவேக் சார்.

வித்யூ ராமன்: நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். உங்களைப் போன்ற ஒரு நகைச்சுவை சகாப்தத்துடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவும்.

பிரசன்னா: விவேக் சார் இனி இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. திரைத்துறையில் அவரது பணியும், அவரது சமூகப் பணியும் நீண்ட நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும். நமது அனைவரது இதயத்திலும், அவர் நட்ட ஒவ்வொரு மரத்திலும் அவர் வாழ்வார். சென்று வாருங்கள் சார்.

பார்த்திபன்: சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!

கெளதமி: தனக்குக் கிடைத்த ஒவ்வொரு தளத்திலும் சமூகத்திற்கான தன் சேவையைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்து, பலருக்கும் முன்மாதிரியாக இருந்த மாமனிதர் 'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்கள். இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ பட்டம், 30 இலட்சத்திற்கும் அதிகமான மரங்களை வளர்த்தது, 5 முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருது எனப் பல தளங்களிலும் சாதனைகளைச் செய்தவர். இன்னும் பல சாதனைகளையும் இலக்குகளையும் அடைந்திருக்க வேண்டிய அவரின், எதிர்பாராத மறைவு, மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர்களது இழப்பால் வாடும் ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். சிறந்த மனிதர்கள் மரணிப்பதில்லை, தங்கள் சேவையின் நினைவினால் நம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பர். திரு #விவேக் அவர்கள் இம்மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும் அவர்கள் வளர்த்த 30 இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் அவர் நினைவைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

செல்வராகவன்: நொறுங்கிப் போயிருக்கிறேன்

சுனைனா: விவேக் அவர்களின் குடும்பத்தினர், நெருக்கமானவர்கள், ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். என்றுமே நம்மைச் சிரிக்க வைத்தவர் இன்று நம்மிடமிருந்து அந்தச் சிரிப்பைப் பறித்துக் கொண்டு விட்டார். அவரது இழப்பை என்றுமே உணர்வோம். ஒரு சகாப்தத்தின் முடிவு.

கே.வி.ஆனந்த்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக். சிறந்த மனிதர். இயற்கையை நேசித்தவர்.

ராதிகா சரத்குமார்: வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சி. உங்களுடன் செலவிட்ட பல அற்புதமான தருணங்கள், நினைவுகள் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. உங்கள் குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள். அன்பு நண்பரே, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

மோகன் ராஜா: இந்த சகாப்த நடிகர் இனி இல்லை என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அதிர்ச்சிகரமாக இருக்கிறது. எம் குமரன் திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நினைவுகளை என்றுமே பொக்கிஷமாக வைத்திருப்பேன். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இமான்: நமது விவேக் அவர்கள் நம்மிடையே இனி இல்லை என்பதை எனது மனமும் ஆன்மாவும் நம்ப மறுக்கின்றன. என்ன ஒரு அசாதாரணமான கலைஞர், மனிதரை நாம் இழந்திருக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

ஹரிஷ் கல்யாண்: நடிகர் விவேக் அவர்கள் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. உண்மையில் மனமுடைந்து போனேன். உங்கள் நடிப்பின் மூலம், சமூகப் பணியின் மூலம் மூலம், அற்புதமான ஒரு ஆன்மாவாக இருந்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உந்துதலாக இருந்திருக்கிறீர்கள். நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மனிதராக எங்கள் மனங்களை என்றுமே வென்றிருக்கிறீர்கள்.

பிரகாஷ் ராஜ்: ஆ விவேக். அன்பு நண்பரே, விரைவில் சென்று விட்டீர்களே. மரங்களையும், சிந்தனைகளையும் நட்டதற்கு நன்றி. உங்கள் நகைச்சுவையின் மூலம் எங்களுக்குப் பொழுதுபோக்கையும், நல்ல சிந்தனைகளையும் தந்ததற்கு நன்றி. உங்கள் இழப்பை உணர்வோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

சுஹாசினி மணிரத்னம்: நொறுங்கிப்போயிருக்கிறேன். இது எப்படி சாத்தியம் விவேக். இவ்வளவு சீக்கிரம் மறையக் கூடாத மிகவும் இளமையான, மிகவும் சாமர்த்தியமான, மிகத் திறமையான, மிக புத்திசாலித்தனமான நபர்.

குஷ்பு: மிகப்பெரிய அதிர்ச்சி, நான் உடைந்து போயிருக்கிறேன். இவ்வளவு சுறுசுறுப்பாக, திடமாக இருந்த ஒரு நபர் எப்படி இறக்க முடியும்? விவேக் மிகச்சிறந்த மனிதர். சீக்கிரம் மறைந்துவிட்டார். அவரது இழப்பைக் கண்டிப்பாக உணர்வோம்.

ஒளிப்பதிவாளர் வெற்றி: நடிகர் திரு.விவேக் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

சுரேஷ் காமாட்சி: ஆயிரமாயிரம் வேண்டுதல்கள் பலிக்கவில்லையா? நேற்று முன்தினம் மகிழ்வோடு நின்றவர் இன்றில்லையா? நம்ப மறுக்கிறது மனம். வாழ்நாளில் என்ன நல்லவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் திரையிலும், தன் வாழ்க்கையிலும் செய்துகாட்டியவர். இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர். இழந்துவிட்டோம். சினிமாவிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சின்னக் கலைவாணர் விவேக்கின் இழப்பு பேரிழப்பு. இதயப்பூர்வமான அஞ்சலிகள்.

அருண் விஜய்: நடிகர் விவேக் நம்மிடையே இல்லை என்பதை நினைத்து அதிர்ச்சியாக இருக்கிறது. நம்மைச் சிரிக்க வைத்த, பொறுப்பாகச் சிந்திக்க வைத்த, அன்பு மனம் கொண்ட உயர்ந்த மனிதர். விரைவில் சென்றுவிட்டார். கண்டிப்பாக அவர் இல்லாத குறையை நாம் உணர்வோம். உங்களை நேசிக்கிறோம் சார். என்றும் எங்கள் மனங்களில் இருப்பீர்கள்.

நிவின் பாலி: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். உங்கள் இழப்பை உணர்வோம்.

கிருஷ்ணா: மனதை நொறுக்கும் செய்தி. அவரது சொந்தங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.

ஆதவ் கண்ணதாசன்: திரைப்படங்களில் தனது நல்ல நடிப்பால் நம்மைச் சிரிக்க வைத்த அற்புதமான மனிதர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அனைவரும் விரும்பும் ஒரு நபர் விவேக் அவர்கள். அவர் கனவு கண்டபடி மரங்களை நட்டு அவரை நாம் பின்பற்றுவோம் என்று நம்புகிறேன்.

எஸ்.ஆர்.பிரபு: திரைத்துறைக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய இழப்பு. நீங்கள் எங்களுக்காகத் தந்த லட்சக்கணக்கான சிரிப்புக்காகவும், நட்ட மரங்களுக்காகவும் என்றுமே நினைவுகூரப்படுவீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.

ஸ்வேதா மோகன்: ஒரு நாள் முன்னர் தான் அவரது கடைசி பதிவு. அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாமும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஓர் உயர்ந்த கலைஞனுக்கு நமது இறுதி மரியாதையைச் செலுத்துவோம். இது மிகப்பெரிய இழப்பு. நான் பெரிய ரசிகை. ஓம் சாந்தி விவேக் சார்.

தவறவிடாதீர்!

VivekVivek demiseActor vivekVivek passed awayவிவேக்நடிகர் விவேக்விவேக் காலமானார்திரையுலகினர் அதிர்ச்சிவிவேக் மாரடைப்பால் காலமானார்திரையுலகினர் இரங்கல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x