

நடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நீங்கள் எங்களை விட்டுச் சென்று விட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல தசாப்தங்களாக எங்களுக்குப் பொழுதுபோக்கைத் தந்திருக்கிறீர்கள். நீங்கள் விட்டுச் சென்ற உங்கள் படைப்புகள் என்றும் எங்களுடன் இருக்கும்"
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.