

விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்துப் பேசாதீர்கள் என்று குஷ்பு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்துல் கலாம் மீது தீவிர பற்று கொண்டவர். மரம் நடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.
நேற்று (ஏப்ரல் 15) காலை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக். பின்பு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தை முன்வைத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பைச் சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதையும், இன்று மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்துப் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இது தொடர்பாக பாஜக கட்சியைச் சேர்ந்த குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் விவேக்கும் ஒருவர். மாரடைப்பின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. அவர் கண்டிப்பாகக் குணமடைந்து விரைவில் நம்முடன் இணைவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விரைவில் குணமடையுங்கள்.
தயவுசெய்து அவர் நேற்று கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டதையும், இன்று அவருக்கு மாரடைப்பு வந்ததையும் இணைத்துப் பேசாதீர்கள். இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவர்களை அவர்கள் வேலையைச் செய்ய விடுங்கள். உங்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்றால் தயவுசெய்து போட்டுக் கொள்ளுங்கள். கற்பனைகளையும், புரளிகளையும் வைத்துக் குழம்பாதீர்கள்".
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.