

இயக்குநர் பொன்ராமுக்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது என நடிகர் சிங்கம்புலி கூறியுள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் சிங்கம்புலி பேசியதாவது:
''1995ஆம் ஆண்டு 'அருணாச்சலம்' படத்தில் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு முதன்முறையாக பொன்ராமைச் சந்தித்தேன். அப்போதே அவருக்கு இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன், சசிகுமார், விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களை வைத்துப் படம் இயக்குகிறார் என்றால் அதற்குப் பின்னால் பெரும் உழைப்பு இருக்கிறது.
அவரிடம் பிடிக்காத விஷயமும் ஒன்று உள்ளது. அது அன்பாகப் பிடிக்காத விஷயம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', விஜய் சேதுபதி படம் உள்ளிட்ட எந்தப் படத்திலும் நான் இல்லை. ஆனால் தேனி, கம்பம் போன்ற நம்ம ஊர் பக்கம் எடுக்கும் படத்தில் மட்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார். அவர் தொடர்ந்து சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
டிக் டாக் செயலி மூலமாக சினிமாவுக்குள் வருவது சாதாரண விஷயம் இல்லை. 15 நொடி வீடியோவில் வரும் பெண் எப்படி ஒரு முழுப் படத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்வி எழலாம். இப்போது மிருணாளினி ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ட்ரெண்டுக்கு ஏற்றவாறு நாம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்''.
இவ்வாறு சிங்கம்புலி பேசினார்.