

பீப் பாடலை சிவகார்த்திகேயன் கசியவிடவில்லை என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பெண்களை கொச்சைப்படுத்தி சமூக வலைதளங்களில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை மற்றும் சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் முன்ஜாமீன் அளிக்க கோரி சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தான் இந்த பீப் பாடலை கசியவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதை சிம்பு மறுத்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் சிம்பு, ''சிவகார்த்திகேயன் பீப் பாடலை லீக் செய்யவில்லை. வேண்டுமென்றே சிலர் சிவகார்த்திகேயன் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
வதந்திகளை நம்பாதீர்கள். 'பீப்' பாடல் விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அவர் என்னை பார்த்துக்கொள்வார். நல்லிணக்கத்தையும், உண்மையையும் நான் நம்புகிறேன்'' என்று சிம்பு தெரிவித்துள்ளார்.