

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
தமிழின் முதல் ஸ்பூஃப் திரைப்படமாக 'தமிழ்ப் படம்' கொடுத்த இயக்குநர் சி.எஸ்.அமுதன், அடுத்து 'ரெண்டாவது படம்' இயக்கினார். இன்னும் இப்படம் வெளியாகவில்லை. தொடர்ந்து 'தமிழ்ப் படம் 2'வை இயக்கினார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் புதன்கிழமை அன்று, தனது அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மேற்கொண்டு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை. தற்போது அதுகுறித்துப் பகிர்ந்துள்ளார்.
"எனது அடுத்த படம் எனது கல்லூர் நண்பர் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பாக இருக்கும். ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டன. பெரிய அளவிலான நடிகர், நடிகையர் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும். விஜய் ஆண்டனி திரைப்படத்துக்கே உரிய 'கண்ணியமான', 'நேர்மறையான' ஒரு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்" என்று சி.எஸ்.அமுதன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, விஜய் ஆண்டனி நடிக்க 'நாக்க முக்க' என்கிற நகைச்சுவைப் படத்தை பல வருடங்களுக்கு முன் திட்டமிட்டதாகவும், அது அப்போது சாத்தியப்படவில்லை என்றும், இம்முறை தான் எழுதிய கதையில் விஜய் ஆண்டனியே சரியாக இருப்பார் என்பதால் அவரை அணுகியதாகவும் அமுதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு மரணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை என்றாலும், இதில் விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடிக்கப் போவதில்லை என்றும் அமுதன் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் தனஞ்ஜெயன், கமல் போரா, பங்கஜ் போரா, பிரதீப் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படம் பெரிய பொருட்செலவில் தயாராகிறது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.