

இயக்குநர் சுந்தர்.சி கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் புதிதாக 1,84,372 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 1,027 பேர் பேர் பலியாகியுள்ளனர்.
திரை பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (ஏப்.13) நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர்.சி.க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஏப்.14) சுந்தர்.சி கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''நண்பர்களே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது. என் கணவர் சுந்தர். சி தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார். அவர் எங்களது கெஸ்ட் ஹவுஸில் இருக்கவுள்ளதால், ஏழு நாட்களுக்குப் பிறகே நான் அவரைச் சந்திக்க இயலும். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி''.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.