

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட்டும் சேர்ந்து '1947' என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
'கஜினி' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து 'துப்பாக்கி' படத்தின் ரீமேக்கான 'ஹாலிடே'வையும், 'மௌனகுரு' திரைப்படத்தின் ரீமேக்கான 'அகிரா'வையும் இயக்கியிருந்தார். இதில் 'அகிரா' திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்திருந்தார். கடைசியாக 2017ஆம் ஆண்டு தமிழில் 'ரங்கூன்' படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்திருந்தார்.
தற்போது ஓம் பிரகாஷ் பட் என்கிற பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து '1947' என்று பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்தத் திரைப்படம் தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது இந்தப் படத்துக்கான ஆயத்த வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்தப் படத்தை பொன் குமரன் இயக்குகிறார். கன்னடத்தின் படங்களை இயக்கி வரும் பொன் குமரன், தமிழில் 'சாருலதா' படத்தை இயக்கியிருந்தார். மேலும் ரஜினிகாந்த நடிப்பில் உருவான 'லிங்கா' திரைப்படத்துக்கு கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார்.
இன்னும் சில மாதங்களில் '1947' படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் நடிகர், நடிகையர் தேர்வு முடிவாகாத நிலையில், பல மொழிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் என்பதால் தேசிய அளவில் பிரபலமான நடிகர்களே முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.