

கடல்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘சீஸ்பைரஸி’ படம் பார்க்க நேர்ந்தது. அது இதயத்தை நொறுக்கக் கூடியதாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். மீன்பிடி நிறுவனங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதும், அது குறித்து யாரும் குரல் எழுப்பாமல் இருப்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆழ்கடலில் நடப்பவற்றை கட்டுப்படுத்த எந்த அரசாங்கமும், சட்டமும் இல்லை.
நாம் சாப்பிடும் கடல் உணவு எப்படி கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலும் கடலில் அழிந்து வரும் இனங்களை திருட ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பலே செயல்படுகிறது.
தேவையான அளவு மட்டுமே மீன்பிடித்தல் என்ற ஒன்று இல்லவே இல்லை. மிகவும் வருத்தமான விஷயம் என்றாலும் இதுதான் உண்மை. நம் கடல்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே. நாம் ஏன் ஈயம், பாதரசம், மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உண்ண வேண்டும்? அனைத்து விதமான தொழிற்சாலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில், சுத்தமான மீன்கள் எதுவும் இல்லை.
பல வருடங்களாக தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளையே உண்பதால் ஊட்டச்சத்து தொடர்பான கவலைகளோ, குறைபாடுகளோட எனக்கு இல்லை.
தற்போது நமது சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் செய்யவேண்டியது பற்றிய ஒரு நிலைபாட்டை நாம் எடுக்க வேண்டும். நம் கடல் அழிந்தால், நாமும் அழிவோம்.
இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.