

ரஜினிக்கு வேற லெவல் எனர்ஜி என்று சூரி குறிப்பிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு வந்தது. பின்பு படப்பிடிப்புத் தளத்தில் கரோனா பரவல், ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ரஜினி தற்போது தேதிகள் கொடுத்திருப்பதால், முழுவீச்சில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். இதில் ரஜினியுடன் நடித்து வரும் சூரியிடம் ரசிகர் ஒருவர், "அண்ணாத்த அப்டேட்" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக சூரி, "தலைவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு. வேற லெவல் எனர்ஜி" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ரஜினியுடன் இயக்குநர் சிவா பேசிக் கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.