'சின்னதம்பி' வெளியாகி 30 ஆண்டுகள்: குஷ்பு நெகிழ்ச்சி

'சின்னதம்பி' வெளியாகி 30 ஆண்டுகள்: குஷ்பு நெகிழ்ச்சி

Published on

'சின்னதம்பி' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, குஷ்பு நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சின்னதம்பி'. 1991-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பாலு தயாரித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது.

இப்போதும் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 'சின்னதம்பி' படத்தின் மூலம் பிரபு மற்றும் குஷ்பு இருவருமே முன்னணி நடிகர்களாக உருவானார்கள். இந்தப் படம் சில திரையரங்குகளில் 300 நாட்களைக் கடந்தும், பல திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தும் திரையிடப்பட்டது.

இன்று (ஏப்ரல் 12) 'சின்னதம்பி' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனால் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு முத்தான திரைப்படம் வெளியாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. 'சின்னதம்பி' படத்தின் மூலம் சினிமாவில் ஒரு போக்கையே நாம் உருவாக்கி இருக்கிறோம். காலம்தான் எவ்வளவு வேகமாகப் பறந்துவிடுகிறது. எனது இயக்குநர் பி.வாசு சார், இசைஞானி இளையராஜா சார், தயாரிப்பாளர் கே.பாலு சார் ஆகியோருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பாலு சார் நம்மைவிட்டு அண்மையில் பிரிந்துவிட்டார். இத்தருணத்தில் என் மீது அன்பைப் பொழிந்த பிரபு சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in