திரை விமர்சனம்- கர்ணன்

திரை விமர்சனம்- கர்ணன்
Updated on
2 min read

நெல்லை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமம் பொடியங்குளம். பக்கத்து ஊர்க்காரர்கள் இவர்களை சண்டைக்கு இழுக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்), அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார். இதனால் கபடி போட்டியிலும் மோதல் எழுகிறது.

கிராமத்தில் பேருந்து நிற்காததால், கல்வீசி தாக்கப்பட, கலவரம் வெடிக்கிறது. அதுதொடர்பான விசாரணையில், பொடியங்குளம் மக்களின் அணுகுமுறை, போலீஸ் அதிகாரி கண்ணபிரானின் (நட்டி நட்ராஜ்) ஈகோவை உரசிப் பார்க்கிறது. பின்னர், அந்த ஊர் என்ன ஆனது, ராணுவத்தில் வேலை கிடைத்த நிலையில் நாயகன் என்ன முடிவெடுக்கிறார், பொடியங்குளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கிடைத்ததா, போராட்டம் முடிவுக்கு வந்ததா என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

ஒரு சின்னப் பெண்ணின் மரணத்தோடு ஆரம்பிக்கும் படம், முதல் காட்சியிலேயே அடுத்து வரப்போகும் விஷயங்களுக்கு தயார்படுத்துகிறது. எளிதில் ஊகிக்கிற கதையோட்டமாக இருந்தாலும், சட்டென்று கோபப்படும் நாயகன், அவனைக் கொண்டாட ஒரு கூட்டம், எதிர்க்கும் ஊர் பெரியவர்கள், ஆதரிக்கும் ஊர் தலைவர், நிற்காத பேருந்தின் பின்னால் இருக்கும் அரசியல், பேருந்தை நிற்கவைக்க தனுஷும், நண்பர்களும் செய்யும் காரியம், அங்கிருந்து சங்கிலித் தொடராக அதன் விளைவுகள், எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கும் இறந்துபோன சின்னப் பெண்ணின் ஆன்மா என நம் எதிர்பார்ப்புக்கு தொடர்ந்து தீனி போடுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சுற்றி நடக்கும் அடக்குமுறையை பொறுக்காத இளைஞனாக சிறப்பான நடிப்பை வழங்குகிறார் தனுஷ். நாயகனின் அத்தனை அம்சங்களையும் இம்மிபிசகாமல் செய்கிறார். தென் மாவட்ட வட்டார வழக்கில் அவர் பேசும் லாகவம், உடல்மொழி அபாரம். ஏற்கெனவே பார்த்த தனுஷ்தான் என்றாலும், இறுதி சண்டைக் காட்சியில் பேசும் வசனம், உணர்ச்சிகரமாக செய்யும் செயல், கடைசி காட்சியில் கண்கலங்கி நிற்பது என மிளிர்கிறார்.

அடுத்து, தனுஷின் ஆசான் ஏமராஜாவாக வரும் லால். மறைந்த மனைவி மஞ்சனத்தியை நினைத்து உருகுவது, தனுஷிடம் விளையாட்டாக சண்டையிடுவது, அவரைப்பாதுகாக்க வேண்டும் என்றே யோசிப்பது என நீண்ட நாட்கள் கழித்து அசத்தலான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

தனுஷின் சகோதரியாக லஷ்மிப்ரியா, தனுஷை கண்டிக்கும் அந்த ஒரு காட்சியில் அசத்தியிருக்கிறார்.

ரஜிஷா விஜயன் நாயகிக்குரிய பங்களிப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால், வழக்கமான பாத்திரமாக இருப்பதால் பெரிதாக ஈர்க்கவில்லை. நட்டி நன்றாக நடித்தாலும் வழக்கமான வில்லனாகவே தெரிகிறார். அழகம்பெருமாள், கவுரி, யோகிபாபு, ஜி.எம்.குமார், ஜானகி, பூ ராமு, லாலுடன் வாஞ்சையுடன் பேசும் அந்த மூதாட்டி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் அத்தனையும் மனதில் நிற்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாத அளவு படத்தின் தன்மையோடு ஒன்றுகிறது. ‘கண்டா வரச் சொல்லுங்க’, ‘உட்ராதீங்க எப்போ’ ஆகிய பாடல்கள் மட்டும் கதையோட்டத்தோடு பொருந்துகின்றன. ‘மஞ்சனத்தி’ பாடல் சிறப்பு. 90-களின் கிராமத்தை கண்முன்னே கொண்டு வருகிறார் கலை இயக்குநர் ராமலிங்கம். அந்த மண், மக்கள், அவர்களது வாழ்வியலை உயிர்ப்புடன் படம்பிடித்துள்ளார் தேனி ஈஸ்வர்.

மையக் கதைக்கு தொடர்பில்லாத தனுஷ் - ரஜிஷா காதல் காட்சிகள் படத்தின் ஓட்டத்துக்கு தடை. கதையமைப்பில், கதாபாத்திரக் கட்டமைப்பில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது. நாயகி தவிர்த்து மற்ற அத்தனை பெண் பாத்திரங்களும் அழுத்தமான வார்ப்புகள்.

நாயகன் கர்ணன், அவனது காதலி திரவுபதி, ஊர் பெரியவர் துரியோதன், வில்லன் கண்ணபிரான் என்ற பெயர் சூட்டல் வசீகரம். நாயகனின் போராட்ட அரசியலை அழகியலுடன் மிக நேர்த்தியாக கொடுத்தது சிறப்பு.

நாயக பிம்பத்தை ஒரேயடியாக தூக்கிப் பிடிப்பதை தவிர்த்துப் பார்த்தால், ‘கர்ணன்’ ஒரு காவியம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in