நடிகர் சிம்புவை பிடிக்க தனிப்படை அமைத்தது உண்மையா?

நடிகர் சிம்புவை பிடிக்க தனிப்படை அமைத்தது உண்மையா?
Updated on
1 min read

நடிகர் சிம்புவை பிடிக்க எந்த தனிப்படையும் அமைக்கப்படவில்லை என்று சென்னை காவல்துறை உயர் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தினர்.

முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிம்புவை கைது செய்ய தடை விதிக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார். இந்நிலையில், சிம்புவைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இதற்கடுத்து, தனது மகனின் 'பீப்' பாடல் குறித்து டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேசும் வீடியோவும் வெளியானது.

''சிம்புவை இப்படி கிழி கிழி என்று கிழிப்பதற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது. தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம்.'' என உஷா ராஜேந்தர் உருக்கமாகப் பேசினார்.

ஆனால், சென்னை காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ''சிம்புவுக்காக எந்த தனிப்படையும் அமைக்கப்படவில்லை. சிம்புவுக்காக விமான நிலையங்களில் தனி பாதுகாப்பு போடவில்லை. தேவையில்லாத வதந்திகளை யாரோ பரப்பி வருகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம்'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in