பாடல் படப்பிடிப்புடன் தொடங்கும் 'தளபதி 65': வைரலாகும் நடன இயக்குநரின் ட்வீட்

பாடல் படப்பிடிப்புடன் தொடங்கும் 'தளபதி 65': வைரலாகும் நடன இயக்குநரின் ட்வீட்
Updated on
1 min read

'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளுடன் தொடங்குகிறது. இதற்கான நடன இயக்குநரின் ட்வீட் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் புதிய படமொன்று உருவாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரியவுள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், அனைத்துத் தகவல்களையும் மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால், நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் ட்வீட்டால் எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது தெரியவந்துள்ளது.

'தளபதி 65' தொடர்பாக ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தளபதி 65 குழுவில் இணைவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என் மீது வைத்த நம்பிக்கைக்கு இயக்குநர் நெல்சன், தளபதி விஜய்க்கு நன்றி. கண்டிப்பாக இந்த வாய்ப்பை மதிப்புடையதாக ஆக்குவேன். வெறித்தனமான ஒரு பாடலுக்கான ஒத்திகை 24 ஏப்ரல் அன்று தொடங்குகிறது. மே 3லிருந்து 9 வரை படப்பிடிப்பு நடக்கிறது".

இவ்வாறு ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

ஜானி மாஸ்டரின் இந்த ட்வீட் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. இதில் படப்பிடிப்புக்கான தேதி அனைத்தையுமே குறிப்பிட்டு இருந்தார். சில மணி நேரத்தில் இந்த ட்வீட்டை ஜானி மாஸ்டர் நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' என்ற பாடல் இணையத்தில் மிகவும் பிரபலம். அதன் நடன அமைப்பும் மக்களிடையே பயங்கரமாக வைரலானது. அந்த நடனத்தை வடிவமைத்தவர்தான் ஜானி மாஸ்டர் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in