

‘மெட்ரோ’ படத்தின் இயக்கு நர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆன்டனி. தொடர்ந்து சமூகப் பிரச்சினை சார்ந்த களங்களில் நின்று ஒரு போராளியாய் பிரதிபலிக்கும் விஜய் ஆன்டனி, இப்படத்திலும் சமூகம் சார்ந்த பின்னணியில் கதைக் களத்தை தேர்வு செய்துள்ளார். அவருடன் பேசியதில் இருந்து..
‘ஆயிரத்தில் ஒருவன்’ தெரியும். அது என்ன ‘கோடியில் ஒருவன்’?
இது ஒரு டியூஷன் மாஸ்டர் பற்றிய கதை. அவர் சமூகம் சார்ந்து என்னவெல்லாம் செய்கிறார் என்பது களம். பல கோடிஏழைகளில் இருந்து ஒருவன் வெளியே வந்து மக்களின் பிரச்சினை பற்றி பேசுகிறான். அதனால்தான் ‘கோடியில் ஒருவன்’ என்ற தலைப்பு. ஒரு தனி மனிதன் நினைத்தால் மக்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் கதைக்களம் பேசும்.
இதற்கு டியூஷன் மாஸ்டர் பாத்திரம் சரியாக இருக்குமா?
அது பகுதிநேர வேலை. அங்கு பலதரப்பட்ட மாணவர்களை சந்திக்க முடியும். நேரம் ஒதுக்கிக்கொண்டு வெவ்வேறு விஷயங்களிலும் ஈடுபடமுடியும். படத்தில்2 விதமான பரிமாணங்களாக என்பாத்திரம் இருக்கும்.
தொடர்ந்து சமூகப் பிரச்சினையை பிரதானமாக கையாள என்ன காரணம்?
என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அந்த எண்ணத்தோடு கதையை எழுதி எடுத்து வந்துவிடுகின்றனர். படம்முழுக்க ரொமான்ஸ், காதல் பின்னணியில் கதை அமைய வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. ‘சலீம்’ கதை அமையும்போது அதுவாக அமைந்தது. அப்போதிருந்து தொடர்ந்து அதே வகை கதைகள் வருகின்றன. சமூக பிரச்சினை சார்ந்த கதைக் களமும்வித்தியாசமானதாக, அவசியமானதாக படும்போது தவிர்க்கக் கூடாது என்று கையாள்கிறேன். எந்த ஒரு கதையையும் முழுமையாக இரண்டரை மணி நேரம் ஒருரசிகனின் மனநிலையில் கேட்பேன். பிடித்திருந்தால் உடனே ஓகே சொல்வது என் வழக்கம்.
திரைப்பட எடிட்டராகவும் உங்களை பார்க்க முடிகிறதே?
ஒரு படத்தின் முக்கிய அங்கம்எடிட்டிங். அதில் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டேன். இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் நல்ல எடிட்டிங் சென்ஸ் உள்ள மனிதர். அப்படிப்பட்ட ஒரு படத்தில் எடிட்டராக பணிபுரிவது சவாலாக இருந்தது.
கரோனா பரவல் காரணமாக, சில நடிகர்கள் சம்பளம் குறைத்துள்ளார்களாமே?
சமீபத்தில் நடித்த 3 படங்களில் நானும் பேசிய சம்பளத்தில்இருந்து ஒரு பகுதியை குறைத்துள்ளேன். நானும் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கும் தெரியும். திரைத் துறைக்கு தயாரிப்பாளர்கள் மிகவும் முக்கியம். அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்.