

'நான் கடவுள்' படத்தின் எழுத்துகள் போடும்போது வரும் 'மா கங்கா' பாடலை இளையராஜா தான் படத்தில் இணைத்தார்.
'நான் கடவுள்' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இறுதிகட்டப் பணிகளான எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன. இறுதி செய்யப்பட்ட காட்சிகளை அப்படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் கொடுத்தார் இயக்குநர் பாலா.
அப்படத்தைப் போட்டு பார்த்த இளையராஜா, பாலாவை அழைத்தார். "எழுத்துகள் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் போட்டிருக்கிறாய், காசியில் எடுத்த காட்சிகள் வைத்திருப்பாய். அதைக் கொண்டு வா. அதை வைத்து எழுத்துகள் போடலாம்" என்றார். என்னிடம் காட்சிகள் இல்லை என்று பாலா பதிலளித்திருக்கிறார்.
பொய் எல்லாம் என்னிடம் சொல்லாதே.. போய் கொண்டுவா என்று இளையராஜா கூறிவிட்டார். உடனே காசியில் உள்ள காட்சிகளை வைத்து, அதன் மீது எழுத்துகள் போட்டு பாலா கொடுத்திருக்கிறார். அதை வைத்துக் கொண்டு இளையராஜா போட்ட பாட்டு தான் 'மா கங்கா' பாடல்.
அப்பாடலைப் பார்த்துவிட்டு, மொத்த படத்தையும் ஒரே பாடலில் முடித்துவிட்டாரே என்று வியந்திருக்கிறார் இயக்குநர் பாலா.