

கதாநாயகர்களுக்கு தோழனாக வந்து சுமார் 25 ஆண்டுகளாக நகைச்சுவையை அள்ளித்தெளித்த விவேக்கிற்கு பிரமோஷன் கிடைத்துள்ளது.
அவர் நாயகனாக நடித்த ‘நான்தான் பாலா’ படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மரம் நடும் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்த விவேக்கை சந்தித்தோம்.
நீங்கள் கதாநாயகனாக வர ஏன் இவ்வளவு நாட்கள் தாமதம் ஆனது?
எம்ஜிஆர், கவுண்டமணி எல்லாரும் 40 வயதுக்கு மேல்தான் கதாநாயகன் ஆனார்கள். என்னைப் பொறுத்தவரை இது தாமதம் இல்லை. காமெடியனாக இருக்கும் பலருக்கும் கதாநாயகனாக விருப்பம் இருக்கும். சிலர் ஓரு சில ஆண்டுகளிலே நாயகனாகி விடுகிறார்கள். நான் நாயகனாக 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்வளவுதான்.
காமெடியனாக இருக்கும் பலரும் நாயகனாக நடிக்கும்போது நகைச்சுவைப் படங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் நீங்கள் சீரியஸான கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களே?
எல்லாரும் அப்படி செய்வதால்தான் நான் அதைச் செய்யவில்லை. ‘நான்தான் பாலா’ கனமான படம். கூலிப்படை தொடர்பான கதையைக் கொண்ட இப்படத்தில் எனக்கு நல்ல வேடம். நான் கனமான வேடம் ஏற்றிருந்தாலும், படத்தில் காமெடியும் உண்டு. கதையொடு கூடிய காமெடி.
இப்போதும் நீங்கள் பல காமெடி நடிகர்களோடு சேர்ந்து நடிக்கிறீர்கள். ஆனால், இன்று வெற்றி பெற்ற பலர் அவ்வாறு நடிப்பதில்லையே?
நான் என் திறமையை நம்புகிறேன். யாரையும், யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை. நல்ல காமெடியை யார் செய்தாலும் நான் பாராட்ட தயங்க மாட்டேன். கவுண்டமணி-செந்தில் உச்சத்தில் இருந்தபோதுதான் நான் வந்தேன். இன்று பலரும் வருகிறார்கள்.
இது ஆரோகியமானதுதான். ஆனால் ரசிகர்கள் ஆதரவு கிடைத்ததும் சினிமாவே தங்கள் காலடியில் இருப்பதுபோல நினைத்துக் கொள்கிறார்கள். காமெடியன்களிடத்தில் ஒற்றுமை இருப்பது மாதிரி தெரியவில்லை. ஃபீல்டில் ஒற்றுமையா இருங்கன்னு சொல்லவும் அவங்க வரல. தமிழ் திரையில் தங்கள் இடத்தை தக்க வைக்கும் ஓட்டத்தில் பங்கேற்று ஓட வேண்டிய நிலையில்தான் இருக்காங்க. மார்க்கெட் போனால் யாரும், யாருக்கும் உதவ முடியாது. அதனால் இங்க ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது.
கருத்துடன் காமெடி என்கிற முறை போயிடுச்சுதானே?
அப்படிச் சொல்ல முடியாது. கலை என்பது மனிதனை சந்தோஷப்படுத்த மட்டுமில்லை, மறைமுகமாக கருத்து சொல்லவும்தான். நல்ல கருத்துகளை வகுப்பறை மாதிரி போதிக்காமல் நகைச்சுவையோடு சொன்னால் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதே நேரத்தில் நடிக்க வந்த புதுசுலேயே நீங்க கருத்து சொல்ல வந்தாலும் ஏத்துக்க மாட்டாங்க.
நட்சத்திர அந்தஸ்து வந்தாத்தான் நாம சொல்றதுல விஷயம் இருக்குன்னு ஏத்துவாங்க. நாமளும் உருப்படியா ஒப்பியடிக்காம நச்சுன்னு கருத்து சொன்னா கண்டிப்பா நம்ம மக்களுக்குப் பிடிக்கும்.
காமெடி நடிகர்கள் பலரும் உடலை பெரிசா கவனிக்கமாட்டாங்க. ஆனால் நீங்கள் அன்று முதல் இன்று வரை இளமையாக இருக்கிறீர்களே?
என்னோட இளமை ரகசியம் என்னன்னு சுத்தி வளைச்சுக் கேக்குறீங்களா? எனது இளமை ரகசியம் என் மேக்கப் மேன். இப்படி நான் விளையாட்டா சொன்னாலும் நாள்தோறும் உடற்பயிற்சி, யோகா செய்வதுதான் என் இளமைக்கு முக்கிய காரணம். சீரியஸாவே நான் இதை கடைபிடிக்கிறேன். அப்புறம் மரங்களைப் பாருங்க.. எந்த மேக்-அப் மேனும் இல்லாம பல நூறு வருஷங்கள் அதே அழகோட இருக்கு. மரத்துக்கு எப்பவுமே சுயநலம் கிடையாது. அதனால அது என்றும் பதினாறா இருக்கு. நம்ம சுயநலத்துக்காக மரங்களை கொலை செய்யுறோம்.
மரங்கள் மேல எப்படி இவ்வளவு விருப்பம்?
கலாம் சார்தான் காரணம். அவர் சொன்னதால் இந்த பணியை தொடங்கினேன். கடந்த 2010ல் இருந்து 2014 வரை 21.5 லட்சம் மரங்களை நட்டிருக்கேன். கலாம் உண்மையில் வாழும் விஞ்ஞான சித்தர். 50 லட்சம் மரங்கள் நடுகிற வரைக்கும் இந்த விவேக் அசரமாட்டான்.