

'பாய்ஸ்', 'களவாணி', 'காதல்' உள்ளிட்ட திரைப்பட வாய்ப்புகள் தனக்கு வந்தபோது, தான் அதை வேண்டாம் என்று நிராகரிக்கவில்லை என நடிகர் சாந்தனு விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல இயக்குநர், நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னாட்களில் நாயகனாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 'வானம் கொட்டட்டும்', 'பாவக் கதைகள்', 'மாஸ்டர்' என சமீபகாலங்களில் இவர் நடித்து வரும் படங்கள் கவனம் பெற்று வருவதோடு, அவரது நடிப்புக்குப் பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் 'சுப்ரமணியபுரம்', 'பாய்ஸ்', 'களவாணி', 'காதல்' ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு முதலில் சாந்தனுவுக்கே வந்ததாகவும், ஆனால் அவரும் அவர் தந்தை பாக்யராஜும் சேர்ந்து இந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டதாகவும் நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலவி வந்தன.
இந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு ட்விட்டர் பக்கமும் பகிர்ந்திருந்தது. இது நடிகர் சாந்தனுவின் கவனத்துக்கு வரவே, அவர் அந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார்.
"தவறான தகவலைப் பரப்பிவிட்டீர்கள். இனி இதைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் உங்களால் சரியான தகவலைச் சொல்ல முடியுமா? உங்களைப் போன்றவர்கள் அடிப்படையில்லாத புரளிகளைப் பரப்புவதால்தான் பொதுமக்கள் அதை நம்புகின்றனர். நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்தப் பட வாய்ப்பையுமே நான் வேண்டாம் என்று மறுக்கவில்லை.
இதே விஷயத்தை வைத்துப் பல பழைய ட்வீட்டுகளை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கேள்வி கேட்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பட வாய்ப்புகளை நான் மறுக்கவே இல்லை. வேறு சில காரணங்களால் அந்த வாய்ப்புகளைத் தவறவிட்டேன். இதுவும் புரியவில்லையென்றால்..." என்று தலையில் கை வைத்திருக்கும் ஒரு ஸ்மைலியைக் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
சாந்தனுவின் இந்த பதிலைப் பாராட்டியிருக்கும் ரசிகர்கள், அவருக்கு ஊக்கம் தரும் வகையில் பதிலளித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் சாந்தனு, இப்படி தன்னைப் பற்றிய பதிவுகளுக்கு நேரடியாக பதில் தருவது இது முதல் முறையல்ல. அண்மையில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் தான் நடித்த பார்கவ் கதாபாத்திரத்தை வைத்துச் செய்து வரும் கிண்டலுக்கும் பதிலடி கொடுத்திருந்தார்.