

சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.அப்படத்துக்கு 'தர்மதுரை' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இடம் பொருள் ஏவல்'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் வெளியாகாமால் இருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிக்க இருக்கிறார். ஏற்கனவே ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஒப்பந்தமான 'வசந்தகுமாரன்' திரைப்படம் கைவிடப்பட்டது.
விஜய்சேதுபதி தங்களுக்கு கொடுக்க வேண்டிய தேதிகள் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இப்பிரச்சினை தற்போது சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்துக்கு 'தர்மதுரை' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். டிசம்பர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.