

கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 'ரேடியோ பெட்டி' தமிழ்ப்படம் தேர்வாகியுள்ளது.
புதுமுக இயக்குநர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ரேடியோ பெட்டி'. இப்படம் தென் கொரியாவில் உள்ள பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசை வென்றது. பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிட இப்படம் தேர்வாகி இருக்கிறது.
இந்நிலையில், கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் உள்ள இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 'ரேடியோ பெட்டி' தேர்வாகி இருக்கிறது. இப்பிரிவில் தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ் படம் 'ரேடியோ பெட்டி' என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே பிரிவில் 'குற்றம் கடிதல்' திரையிடப்பட்டது.
'ரேடியோ பெட்டி' குறித்து இயக்குநர் ஹரி விஸ்வநாத், "83 நிமிடங்கள் ஓடும் படம் ‘ரேடியோ பெட்டி’. “எனது தாத்தா ரேடியோ பெட்டியின் காதலர். அது அவருக்கு நம்பகமான ஊடகம். கண்ணும் கருத்துமாக அவர் பாதுகாத்துவந்த ரேடியோ பெட்டிக்கும் அவருக்கும் இடையிலான நேசத்தை நானறிவேன்.
எலெக்ட்ரானிக் சாதனம் ஒன்று ரத்தமும் சதையுமான ஒரு மனிதரோடு நெருக்கம் பாராட்ட முடியுமா என்ற கேள்விக்கான பதிலை உணர்வுபூர்வமான திரைக்கதையாக மாற்றப் போராடினேன். அதற்கு வெற்றி கிடைத்துவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.