

தனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு, ஓராண்டுக்குப் பிறகு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம்.
'காடன்' படத்தை விளம்பரப்படுத்த விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள், திருமணம் செய்ய ஜுவாலா கட்டாவைத் தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:
"பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை காரணமாகவே அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனெனில் எனக்குக் காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். உறவுமுறையில் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதுதான் சிறந்தது.
நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது ஜுவாலா கட்டா என்னுடைய உணர்வை மதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள்.
எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டபோது, அதனைத் திரைப்படமாகத் தயாரிக்கலாமா..! என்று கேட்டேன். அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா? எனக் கேட்டார். இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் அவர்களுடைய சுயசரிதையைத் திரைப்படமாகத் தயாரிக்க விரும்புகிறேன்"
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.