ஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம்: விஷ்ணு விஷால்

ஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம்: விஷ்ணு விஷால்
Updated on
1 min read

இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு, ஓராண்டுக்குப் பிறகு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம்.

'காடன்' படத்தை விளம்பரப்படுத்த விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

"இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் 'காடன்' வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் 'எஃப் ஐ ஆர்' வெளியாகவிருக்கிறது. 'மோகன்தாஸ்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன்.

'ஜீவி' படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்.

இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. 'ராட்சசன்' படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in