விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் அனு கீர்த்தி?

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் அனு கீர்த்தி?
Updated on
1 min read

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் நாயகியாக அனு கீர்த்தி ஒப்பந்தமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் அதிகமான படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதிதான். தெலுங்கில் வில்லனாக நடித்த 'உப்பெனா' படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால், அங்கிருந்தும் பல்வேறு வாய்ப்புகள் விஜய் சேதுபதிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தி மற்றும் மலையாளம் ஆகியவற்றிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை அளவிலேயே இருந்த பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 'எம்.ஜி.ஆர் மகன்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கி வருகிறார் பொன்ராம். ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக இமான், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். 'சேதுபதி' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக அனு கீர்த்தி நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனு கீர்த்தி 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வந்தாலும், அவர் ஒப்பந்தமாகியுள்ள பெரிய படமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in