

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இயக்குநர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண்விஜய், யோகிபாபு நடிக்கும் படப்பிடிப்பில் தயாரிப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
பழநி அருகே நெய்காரப்பட்டியில் கடந்த ஒரு வாரமாக நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானிசங்கர், நடிகர் யோகிபாபு நடிக்கும் ‘ஏவி 33’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தை ‘சாமி’, ‘சிங்கம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ஹரி மற்றும் தயாரிப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா அறிகுறி தென்பட்டது.
இதையடுத்து பழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் இயக்குநர் ஹரிக்கு காய்ச்சல் இருந்தபோதும், கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனால், உடன் இருந்த தயாரிப்பு பிரிவைச் சேர்ந்தநபருக்கு கரோனா தொற்று உறுதியானது.
படப்பிடிப்பு ரத்து
இதையடுத்து படப்பிடிப்பு நடந்த இடத்தில் சுகாதாரத் துறையினர் அனைவருக்கும் பரிசோதனை நடத்தினர். நடிகர்கள் அருண் விஜய், யோகிபாபு, பிரியா பவானிசங்கர் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை. படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கு கரோனா பாதிப்பால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழநியில் தங்கியிருந்த நடிகர்கள் அருண்விஜய், யோகிபாபு ஆகியோர் உடற்பயிற்சிக் கூடம், கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்தது தெரியவந்துள்ளது. பரிசோதனை முடிவைப் பொறுத்து பழநியில் கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மருத்துவத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.