மக்கள் வருகை குறைவு; மூடப்படும் திரையரங்குகள்: திரையரங்க உரிமையாளர்கள் வேதனை

மக்கள் வருகை குறைவு; மூடப்படும் திரையரங்குகள்: திரையரங்க உரிமையாளர்கள் வேதனை
Updated on
1 min read

மக்கள் வருகை குறைந்து வருவதால், தமிழகத்தில் பல ஒற்றைத் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு கோடை விடுமுறையிலிருந்து எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்தது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன், மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. முதல் பெரிய நடிகரின் படமாக விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' ஜனவரி 13-ம் தேதி வெளியானது.

இந்தப் படத்துக்குப் பிறகு 'கபடதாரி', 'களத்தில் சந்திப்போம்', 'பாரிஸ் ஜெயராஜ்', 'சக்ரா', 'சங்கத்தலைவன்', 'அன்பிற்கினியாள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. ஆனால், எந்தவொரு படத்துக்கும் மக்கள் கூட்டம் வரவில்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் நஷ்மடைந்து வருகிறார்கள். மேலும், பல்வேறு திரையரங்குகள் மூடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "உண்மை தான். 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு வெளியான எந்தவொரு படமும் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. 'களத்தில் சந்திப்போம்' படம் மட்டும் பி மற்றும் சி சென்டர்களில் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. மற்ற அனைத்துப் படங்களுமே தோல்வியே.

ஒவ்வொரு காட்சிக்கும் 15 பேர் கூட வரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இப்படியான சூழலில் திரையரங்குகளை எப்படித் தொடர்ச்சியாக நடத்துவது? தமிழகத்தில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு எந்தவிதப் பிரச்சினையுமே இல்லை. ஆனால், பல்வேறு ஒற்றைத் திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டன.

தற்போது எங்களுக்கு 'கர்ணன்' மற்றும் 'சுல்தான்' ஆகிய படங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in