

தீபாவளிக்கு திரையிடப்பட உள்ள வேதாளம் படத்தை வரவேற்பதற்கான ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க ஒரு வாரத்துக்கு முன்பே தியேட்டர்களில் துணிகளைத் தொங்கவிட்டு அஜித் ரசிகர்கள் இடம் பிடித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி கமல்ஹாசன் நடித்துள்ள தூங்காவனம், அஜித் நடித்துள்ள வேதாளம் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில் வேதாளம் திரைப்படம் திருச்சியில் கலையரங்கம், ரம்பா, எல்.ஏ. சினிமாஸ் (மாரிஸ்) ஆகிய திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், அங்கு ஃபிளக்ஸ் பேனர், கட் அவுட்டுகளை வைப்பதற்கு அஜித் ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அங்கு தங்களுக்கான இடத்தை முன்கூட்டியே உறுதி செய்து கொள்வதற்காக, எந்த பகுதி ரசிகர்கள், எத்தனை அடி நீள, அகலத்தில் ஃபிளக்ஸ் வைக்கப்பட உள்ளது என்ற விவரங்களை வெள்ளைத்துணியில் எழுதித் தொங்கவிட்டு, அந்த தூரத்துக்கு கயிறுகட்டி இடம் பிடித்து வருகின்றனர்.
தேர்தல் விளம்பரங்களுக்காக சாலையோர சுவர்களில் கட்சிகளின் பெயரை எழுதியும், பேருந்துகளில் சீட் பிடிக்க கர்சீஃப், துண்டு போட்டும் முன்கூட்டியே இடம் பிடிப்பதுபோல, தியேட்டர்களில் ஃபிளக்ஸ் வைப்பதற்கும் ஒரு வாரத்துக்கு முன்பே துணியைத் தொங்கவிட்டு இடம் பிடிக்கும் செயல் வேடிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அஜித் ரசிகரான கே.கே.நகரைச் சேர்ந்த சிவா கூறும்போது, “முன்பெல்லாம் 2 நாட்களுக்கு முன்புதான் ஃபிளக்ஸ் வைப்போம்.
ஆனால், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் வந்தபோது, தியேட்டரில் ஃபிளக்ஸ் வைக்க இடம் கிடைக்கவில்லை. சாலையோரத்தில் வைத்தால் போலீஸார் அகற்றிவிடுகின்றனர். எனவே, இம்முறை ஒரு வாரத்துக்கு முன்பே, அனைத்து பகுதியைச் சேர்ந்த ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டனர். 4 ஃபிளக்ஸ் வைப்பதற்காக நாங்களும் துணியை தொங்க விட்டுள்ளோம். நாளை மறுநாள் ஃபிளக்ஸ் வைத்துவிடுவோம்” என்றார்.
இதுகுறித்து கலையரங்கம் திரையரங்க நிர்வாகி கஸ்தூரி மரியம்பிச்சையிடம் கேட்டபோது, “பல முன்னணி நடிகர்கள் நடித்த எத்தனையோ படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன.
ஆனால், அப்போதெல்லாம் இப்படி இருந்ததில்லை. இந்த முறை ஒரு வாரத்துக்கு முன்பே அஜித் ரசிகர்கள் துணிபோட்டு இடம் பிடிப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்களுக்குள் எவ்வித தகராறும் ஏற்பட்டுவிடாத வகையில், ஃபிளக்ஸ் வைப்பதற்கான இடங்களை பிரித்துக் கொடுத்து வருகிறோம்” என்றார்.