

டிசம்பர் 4ம் தேதி 'ரஜினி முருகன்' வெளியாவதால், அத்தேதியில் வெளியாக இருந்த 'பசங்க 2' திரைப்படம் டிசம்பர் 24ம் தேதியில் வெளியீட்டுக்கு மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். இறுதிகட்டப் பணிகள், சென்சார் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால், டிசம்பர் 4ம் தேதி வெளியீடு என்று அறிவித்தார்கள்.
அதே சமயத்தில், 'ரஜினி முருகன்' வெளியீட்டிற்கான அனைத்து பிரச்சினைகளும் முடிந்து டிசம்பர் 4ம் தேதி வெளியீட்டிற்கு முயற்சி செய்தார்கள். 'ரஜினி முருகன்' படத்தைப் பார்த்த பிரபல பைனான்சியர் 'ரஜினி முருகன்' தனியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று 'பசங்க 2' படத்தை வெளியிடுபவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு 'பசங்க 2' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியீட்டிற்கு மாற்றி அமைத்திருக்கிறார்கள்.