

தனது பிறந்தநாளன்று ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த நிலா.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. தற்போது மலேசியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் மலாகா நகரில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, தொடர்ந்து கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. தற்போது பாடல் ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். அப்பாடலுக்கான நடன அமைப்புகளை சதீஷ் செய்து வருகிறார்.
சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் ரஜினி ரசிகை நிலா. ரஜினியை எப்படி சந்தித்தார் என்பது குறித்து ரசிகை நிலா, "இன்று எனது பிறந்தநாள். நான் தீவிர ரஜினி ரசிகை. ரஜினிகாந்த் மலேசியாவில் இருப்பதால் அவரை என் பிறந்தநாளில் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.
காலை 5 மணிக்கெல்லாம் சங்ரி லா ஹோட்டலுக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். இன்று படப்பிடிப்பு இல்லாததால் ரஜினிகாந்த் அறையிலிருந்து வெளியேவரமாட்டார் என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். ஆனால், என் உள் உணர்வு சொல்லியது இன்று நான் ரஜினியை சந்திப்பேன் என்று.
மூன்று மணி நேரம் காத்திருந்தேன். அப்போது விஐபி நுழைவுவாயில் வழியாக ரஜினிகாந்த் வந்தார். அவரைப் பார்த்ததும் நான் பரவசம் அடைந்தேன். கூட்டம் நிறைய இருந்ததால் என்னால் அவர் அருகே செல்ல முடியவில்லை. அவரை நெருங்கமுடியாது என்ற ஆதங்கத்தில் அழுதேன். அப்போது என் நண்பர்கள் என்னை உடனடியாக அவர்கள் தோள் மீது தூக்கி உயர்த்திக் காட்டினர்.
நான் "இன்று எனது பிறந்தநாள். தந்தையே உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்" என எழுதப்பட்ட என் கையில் இருந்த பதாகையை காட்டினேன். அவர் என்னை கவனித்தார். ஆனாலும்கூட அவரை நெருங்க முடியவில்லை. திடீரென அந்த அதிசயம் நடந்தது. அவர் காரில் ஏறியவுடன் அழைத்தார். அப்போது என் கன்னத்தில் தட்டி "டேக் கேர் மா" என்று வாழ்த்தினார். என் கண்களில் இருந்து நீர் ததும்பியது. இந்த முறை ஆனந்தத்தில்" என்று தெரிவித்திருக்கிறார்.