வதந்திகளைப் பரப்பாதீர்கள்: எஸ்.பி.ஜனநாதன் தரப்பினர் காட்டம்

வதந்திகளைப் பரப்பாதீர்கள்: எஸ்.பி.ஜனநாதன் தரப்பினர் காட்டம்
Updated on
1 min read

வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்று எஸ்.பி.ஜனநாதன் தரப்பிலிருந்து காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று (மார்ச் 11) மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனிடையே, சிலர் அவர் காலமாகிவிட்டார் என்று செய்திகளைப் பரப்பினார்கள். பலரும் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்யத் தொடங்கினார்கள்.

இது தொடர்பாக 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 7 சி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். சிறந்த மருத்துவர்களிடம் பேசி வருகிறோம். இப்போது அஞ்சலி தெரிவிப்பது நெறிமுறையற்ற செயல். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்"

இவ்வாறு 7சி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், எஸ்.பி.ஜனநாதனிடம் பணிபுரிந்து வரும் உதவி இயக்குநர் பாலாஜி "பலரும் அவர் காலமாகிவிட்டார் என்று தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது வருத்தமாக உள்ளது. மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்தகட்ட சிகிச்சைக்குச் செல்வோம்.

அதை நம்பிக்கையுடன் தொடங்குவோம் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யவுள்ளார்கள். அதற்குப் பிறகு தான் எதுவாக இருந்தாலும் சொல்வார்கள். தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in