'டாக்டர்' வெளியீடு ஒத்திவைப்பு

'டாக்டர்' வெளியீடு ஒத்திவைப்பு

Published on

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'ஹீரோ' படத்துக்குப் பிறகு 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'டாக்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 26-ம் தேதி 'டாக்டர்' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மார்ச் 26-ம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.

புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். 'டாக்டர்' படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, ஊக்கத்தை அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு மதிப்புடைய படமாக 'டாக்டர்' இருக்கும்".

இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in