

'சத்யா', 'பேசும் படம்' ஜோடியான கமல் - அமலா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படத்துக்கான செய்திகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இச்செய்திகள் அனைத்துக்கும் 'தூங்காவனம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'சீக்கட்டி ராஜ்ஜியம்' பத்திரிகையாளர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்தார் கமல்.
"நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அமலாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்கவிருக்கிறேன். அப்படத்தை இயக்குநர் ராஜீவ் குமார் இயக்கவிருக்கிறார். ஷரினா வகாப் முக்கிய பாத்திரத்திலும், மேலும் ஒரு நாயகியும் நடிக்கவிருக்கிறார்கள். அந்த நாயகி யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக இருக்கிறது" என்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் கமல்.
மேலும், இந்தியிலும் இப்படத்தை உருவாக்க சில தயாரிப்பாளர்கள் தன்னை தொடர்புகொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரியில் அமெரிக்காவில் தொடங்கவிருக்கிறது இப்படத்தின் படப்பிடிப்பு. மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.