சென்னையில் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?
Updated on
1 min read

ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.

மீண்டும் எப்போது ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது மார்ச் 15-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக ரஜினியுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரிடமும் தேதிகள் வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து வட மாநிலத்தில் சில முக்கியமான காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டது படக்குழு. இதுவரை படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்துக்குமான எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டன. அனைத்து பணிகளும் முடிந்து 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in