நட்பு, உடற்பயிற்சி தான் என் வாழ்க்கை: மனம் திறக்கும் ஆர்யா

நட்பு, உடற்பயிற்சி தான் என் வாழ்க்கை: மனம் திறக்கும் ஆர்யா

Published on

நட்பு, உடற்பயிற்சி தான் தனது வாழ்க்கை என்று ஆர்யா அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா சைகல், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெடி'. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

'டெடி' படத்தை விளம்பரப்படுத்த ஆர்யா பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவருடைய நட்பு மற்றும் உடற்பயிற்சி குறித்துப் பேசியுள்ளார்.

அந்தப் பகுதி:

உங்கள் சமூக வலைதளப் பதிவுகளில் திரைப்படங்களைப் பற்றிக் குறைவாகவே இருக்கிறது. நட்பு, உடற்பயிற்சி இதைப் பற்றியே அதிகம் பகிர்ந்துள்ளீர்கள்..

அதுதான் என் வாழ்க்கை. நான் ஒரு விளையாட்டு வீரனாகியிருக்க வேண்டும் என்று என் மனைவி சொல்லிக் கொண்டே இருக்கிறார். 3ஆம் வகுப்பிலிருந்து நான் மைதானத்தில் ஆடி வருகிறேன். உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவதில் எனக்கு நல்ல ஆர்வம் இருந்ததால் என்னைப் போலவே சிந்திக்கும் சிலரின் நட்பு கிடைத்திருக்கிறது. அவர்களுடனான நட்பு, நாங்கள் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி எல்லாம் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும்.

சோம்பேறித்தனமாக, உடற்பயிற்சி செய்யாமல் வாழ்பவர்களைப் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

நீங்கள் தான் பிரச்சினை என்றால் தீர்வும் நீங்கள் தான். உலகிலேயே நீங்கள் தான் அதிகமான வேலை செய்யும் நபராக இருந்தாலும், உங்கள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் ஆரோக்கியத்துக்கென அரை மணி நேரத்தைத் தினமும் ஒதுக்க வேண்டும். அப்படி தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தைக் கொண்டு வரும் மன உறுதி இருப்பது மிகவும் முக்கியம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in