

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து ஐங்கரன் நிறுவனம் விலகிவிட்டது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரத்தில், தயாரிப்பாளர் தாணு அப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று பிரச்சினை எழுப்ப படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விஜய் மில்டன் - விக்ரம் இணைப்பில் வெளியான '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் மோசமான விமர்சனங்களப் பெற்றது. எதிர்பார்த்த அளவுக்கு வசூலிக்கவும் இல்லை.
இதனால், ஆனந்த் ஷங்கர் - விக்ரம் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க முடியுமா என்று ஐங்கரன் நிறுவனம் யோசிக்க ஆரம்பித்தது. படப்பிடிப்பைத் தொடங்காமல் இருந்ததால், படம் கைவிடப்பட்டது என தகவல்கள் பரவின.
தற்போது, இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து ஐங்கரன் நிறுவனம் விலகிவிட்டது. இப்படத்தை தயாரிக்க சமீபத்தில் பிரம்மாண்டமான படத்தை தயாரித்த இரு தயாரிப்பாளர்களில் ஒருவர் முன்வந்திருக்கிறார். படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.