ரஜினி பிறந்தநாளில் வெளியாகிறது லிங்கா

ரஜினி பிறந்தநாளில் வெளியாகிறது லிங்கா
Updated on
1 min read

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'லிங்கா' படத்தினை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ரஜினி, சோனாக்‌ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'லிங்கா' படத்தினை இயக்கி வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தினை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தற்போது ரஜினி, சந்தானம், கருணாகரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ரஜினி, அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

உடல்நிலை முழுமையாக சரியான பின்பு, ரஜினியின் நேரடி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் ரஜினி டூப் இல்லாமல் அவரே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தினை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்தாலும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் அப்பணிகளை முடிக்க கால தாமதம் ஏற்படுமாம்.

2013ம் ஆண்டு ரஜினி பிறந்த நாளன்று 'கோச்சடையான்' வெளியாவதாக இருந்தது. ஆனால் இறுதியில் தள்ளிவைக்கப்பட்டது. அது போல் அல்லாமல், ரசிகர்களை குளிரவைக்க இந்த பிறந்த நாளில் 'லிங்கா' வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in