

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' இரண்டாம் பாகத்தின் நிலை குறித்து இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும், அஜித்தை வைத்து 'வேதாளம்' மாதிரியான படங்களை எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
'என்னை அறிந்தால்' இரண்டாம் பாகம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கெளதம் மேனன், 'தி இந்து' ஆங்கில இதழுக்குக் கொடுத்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்தப் பேட்டியில் "வேதாளம்' படத்தை தீபாவளி பண்டிகையை மனதில் கொண்டே உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அது போன்றதொரு படத்தை நான் அஜித்தை வைத்து இயக்க மாட்டேன். எனக்கு 'என்னை அறிந்தால்' மாதிரியான படத்தைத் தான் அஜித்தை வைத்து இயக்க ஆசை.
'என்னை அறிந்தால்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முதல் பாதி கதையை எழுதி முடித்துவிட்டேன். அஜித் தரப்பில் இருந்து எந்தொரு உத்தரவாதம் அளிக்கவில்லை. 'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு நாங்கள் அதிகமுறை பேசவில்லை. அது முக்கியமில்லை. கதை முழுமையாக தயாரானவுடன் அவருடைய வீட்டின் கதவைத் தட்டுவேன்" என்று கெளதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.
முழு பேட்டியின் வீடியோ - ஆங்கிலத்தில்
</p>