

'ஏலே' வெளியீட்டுப் பாணியை, அப்படியே 'மண்டேலா' படத்துக்கும் பின்பற்றப் படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'ஏலே'. சசிகாந்த் வழங்க புஷ்கர் - காயத்ரி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் வெளியீட்டின் போது, திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதலால் நேரடியாக விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குக் கொடுத்துவிட்டது தயாரிப்புத் தரப்பு. இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தப் பாணியை அப்படியே தங்களுடைய மற்றொரு தயாரிப்பான 'மண்டேலா' படத்துக்கும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மண்டேலா'. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.
விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார். பரத் சங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தையும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜய் தொலைக்காட்சியில் 'மண்டேலா' ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.