

இயக்குநர் அட்லீ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பில் எஸ்.ஜே.சூர்யா முன்னணியில் இருப்பதாக தகவல்.
விஜய், ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. கோவாவைத் தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
'புலி' போதுமான வரவேற்பு கிடைக்காததால், தனது அடுத்த படத்தின் கதைப் பொறுப்பில் பெரும் கவனம் எடுத்து வருகிறார் விஜய்.
எஸ்.கே.சூர்யா, மோகன் ராஜா உள்ளிட்ட 10 இயக்குநர்கள் விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், விஜய் யாரிடமுமே உங்களுக்கு படம் பண்ணுகிறேன் என்று உறுதி அளிக்கவில்லை.
இந்நிலையில், எஸ்.கே.சூர்யாவை மட்டும் அழைத்து இரண்டாவது முறை முழுக்கதையையும் கேட்டிருக்கிறார் விஜய். இதுகுறித்து விஜய் நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, "விஜய் சார் யாரையும் இரண்டாவது முறை அழைக்கவில்லை. ஆனால், எஸ்.ஜே.சூர்யாவை மட்டும் தான் அழைத்து பேசினார். ஆகவே, விஜய் - எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது. விஜய் சாரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" என்று தெரிவித்தார்கள்.