தன் பெயரைப் பயன்படுத்தி மோசடி: ‘மாயா’ இயக்குநர் பகிர்வு

தன் பெயரைப் பயன்படுத்தி மோசடி: ‘மாயா’ இயக்குநர் பகிர்வு
Updated on
1 min read

தன் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் போலி ஐடியைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அஸ்வின் சரவணன்

நயன்தாரா நடித்த ‘மாயா’ (2015), டாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ (2019) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’. 'மெர்சல்' படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தைத் தயாரித்து முடித்துவிட்டது தேனாண்டாள் நிறுவனம். ஆனால், 'மெர்சல்' படத்துக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தப் படம் இப்போது வரை வெளியாகவே இல்லை. தற்போது வரை பலரும் அஸ்வின் சரவணனிடம் எப்போது 'இறவாக்காலம்' வெளியாகும் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தன் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் போலி ஐடியைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின் சரவணன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''போலி ஐடி குறித்த எச்சரிக்கை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போலி ஐடியின் மூலம் என் பெயரைப் பயன்படுத்தி ஒரு நபர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வருவது எனது கவனத்துக்கு வந்தது. அவர் பல பெண்களிடம் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் கேட்டு வருகிறார். இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடும் முன் உறுதிசெய்து கொள்ளுமாறு அனைத்து நடிகர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது மட்டுமே என்னுடைய ஒரே ஐடி''.

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

மேலும் அத்துடன் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் அஸ்வின் இணைத்துள்ளார். அதில் அந்தப் போலி ஐடி நபர் ஒரு பெண்ணிடம் தான் அதர்வாவை வைத்துப் படம் இயக்கவுள்ளதாகவும், அப்பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் அவரைத் தன்னுடைய படத்தில் நாயகியாக்குவதாகவும் பேசியுள்ளார்.

தற்போது அஸ்வின் சரவணன் தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார். இதில் பிரசன்னா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in