

ஓடிடியில் 'ஜகமே தந்திரம்' வெளியீடு உறுதியாகி இருப்பதால், தனுஷ் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நீண்ட நாட்களாக வெளியீடு குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக நேற்று (பிப்ரவரி 22) ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, 'ஜகமே தந்திரம்' ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானபோது, தனுஷ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் தனுஷ் - தயாரிப்பாளர் சசிகாந்த் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் திரையரங்க வெளியீடாக 'ஜகமே தந்திரம்' மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓடிடி வெளியீட்டை உறுதி செய்து டீஸரும் வெளியிடப்பட்டது. இதனால் தனுஷ் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், 'ஜகமே தந்திரம்' டீஸரை ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் உற்சாகமாக ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் டீஸர், அது தொடர்பான ட்வீட் என எதையுமே தனுஷ் ஷேர் செய்யவில்லை.
நேற்று (பிப்ரவரி 22) 'கர்ணன்' படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தது குறிப்பிடத்தக்கது.