

அட்லீ படத்துக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதில் 10 இயக்குநர்களுக்கு இடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கி வரும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் - ஏமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
விஜய்யை அடுத்து இயக்கப் போகும் இயக்குநர் யார் என்று விஜய் தரப்பில் விசாரித்த போது, அவர் இன்னும் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்கள். மேலும், மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சுமார் 10 இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார். ஆனால், நீங்கள் தான் இயக்குநர் என்று விஜய் யாரிடம் உறுதியளிக்கவில்லை என்று கூறினார்கள்.
விஜய்யிடம் கதை கூறிய இயக்குநர் ஒருவரிடம் கேட்ட போது, "கதை கூறியது உண்மை தான். ஆனால், நான் இயக்குகிறேனா என்பதை விஜய் சார் தான் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.
'புலி' திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், விஜய் தனது அடுத்த படத்தின் கதையில் மிகவும் கவனம் எடுத்து வருகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.