

லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சுவாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
'ரோமியோ ஜூலியட்' படக் கூட்டணியான இயக்குநர் லட்சுமணன் மற்றும் ஜெயம் ரவி இணைய திட்டமிட்டார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரிக்க இருக்கிறார்.
'மிருதன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், லட்சுமணன் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்றும், இன்னொரு கதாபாத்திரம் யார் என்பது பேச்சுவார்த்தையில் இருக்கிறது என்றும் லட்சுமணன் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சுவாமியிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது படக்குழு.
'தனி ஒருவன்' படத்தின் மூலம் ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மீண்டும் இதே கூட்டணி இப்படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.