

நீங்கள் ஒரு ஹீரோ என்று கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. போட்டியின் 4-வது நாளிலேயே இந்திய அணி வாகை சூடியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 4-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் , 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்த அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் அஸ்வினை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
இந்தப் பாராட்டுகள் தொடர்பாக அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இப்போது நான் எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் விவரிக்க இயலவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். கூட்டமாகத் திரண்டு வந்து, என்னை ஒரு நாயகனைப் போல உணரச் செய்த, கிரிக்கெட் ஞானம் உள்ள சென்னை ரசிகர்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்"
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ. இந்த களத்தில் சதம் என்பது பார்க்க அற்புதமாக இருந்தது. இப்படியே தொடருங்கள். உத்வேகம் தரக்கூடிய இன்னும் பல தருணங்களை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்"
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.