

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் தனுஷ்.
சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ். இந்தப் படத்தில் நாயகனாக நடித்து, இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார்கள்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்களிலிருந்து, ஒரு பாடலை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த ஆண்டின் எனது முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் நான் நடித்துவரும் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல் அது. 'டாடா பாய் பாய்' என்று தொடங்கும் இந்தப் பாடலை கானா வினோத் எழுதியுள்ளார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்"
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.