

சமீபத்தில் சர்ச்சையான தனது ட்விட்டர் பதிவுக்கு சிவாங்கி விளக்கம் அளித்துள்ளார்.
பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக வருகை ட்விட்டர் தளத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது. அவரது வருகை உறுதி செய்யப்பட்ட உடனேயே எதிர்க்கட்சியினர் #GoBackModi என்ற ஹேஷ்டேகில் ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். இது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டானது.
இந்த ஹேஷ்டேகில் பலரும் ட்வீட் செய்து கொண்டிருக்கும்போது, யாருமே எதிர்பாராத வகையில் #GoBackModi என்று ட்வீட் செய்தார் ஓவியா. இது இணையத்தில் வைரலானதால், பாஜக கட்சியினர் ஓவியா மீது புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கியின் ட்விட்டர் பக்கத்திலும் "#GoBackModi" என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டது. இதையும் பலரும் ஷேர் செய்து பதிலளிக்கத் தொடங்கினார்கள்.
இந்த ட்விட்டர் பதிவு தொடர்பாக சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் "இந்த ட்விட்டர் கணக்கை ரிப்போர்ட் செய்யுங்கள். நான் ட்விட்டர் தளத்தில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவின் மூலம், அவரைச் சுற்றி நிலவி வந்த சர்ச்சைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.