

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், வெளியீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் ஃநெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம், நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பெரும் தொகை அளிக்க முன்வந்தது. ஆனால், திரையுலகினரின் வற்புறுத்தல் மற்றும் தனுஷின் மனஸ்தாபத்தால் திரையரங்க வெளியீடு என்று முடிவானது. அந்தச் சமயத்தில்தான் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மற்றொரு படமான 'ஏலே' வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்களுடன் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் 'ஏலே' படத்தை நேரடியாக விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குக் கொடுத்து ஆச்சரியத்தை அளித்தது. அதோடு மட்டுமன்றி, முன்னதாகப் பெரும் தொகை அளிக்க முன்வந்த ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திடம் மீண்டும் பேசி 'ஜகமே தந்திரம்' படத்தின் நேரடி ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது. இதனால் திரையரங்குகளில் 'ஜகமே தந்திரம்' வெளியாகாது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 'ஜகமே தந்திரம்' படத்தை இந்தியாவில் 6 மொழிகளில் வெளியிட ஃநெட்ப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் மூலமாக இந்தியாவில் தங்களுடைய ஓடிடியைப் பிரபலமாக்க ஃநெட்ப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது.