

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவரது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'உறுமீன்'. இப்படத்தின் படப்பிடிப்பின் போது பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருமே இச்செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆகையால், விரைவில் திருமணம் செய்கிறார்கள் என்ற தகவல்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி வந்தன.
இந்நிலையில், பாபிசிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவரது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது. இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்குபெற இருக்கிறார்கள்.
நிச்சயதார்த்த தினத்தன்று அடுத்தாண்டு நடைபெற இருக்கும் திருமணத் தேதியை முறையாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், திருமணத்துக்குப் பிறகு நடிப்பது பற்றி எல்லாம் ரேஷ்மி மேனன் முடிவுக்கே விட்டிருக்கிறார் பாபி சிம்ஹா.