'சித்தி 2' தொடரிலிருந்து விலகியது ஏன்? - ராதிகா தரப்பு விளக்கம்

'சித்தி 2' தொடரிலிருந்து விலகியது ஏன்? - ராதிகா தரப்பு விளக்கம்
Updated on
1 min read

'சித்தி 2' மெகா தொடரிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்த ராதிகா, இனி தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சீரியல் நடிப்பிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்திருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இது தொடர்பாக ராதிகா தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

‘‘சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது. அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில் எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியல் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார்.

விரைவில் தேர்தல் வர உள்ளது. ராதிகாவின் கணவர் சரத்குமார் ஏற்கெனவே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பக்கபலமாக இருக்கவும், முழுக்க அரசியலில் ஈடுபடவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். விரைவில் அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தெரியவரும்!".

இவ்வாறு ராதிகா தரப்பு தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in