'சித்தி 2' தொடரிலிருந்து விலகினார் ராதிகா

'சித்தி 2' தொடரிலிருந்து விலகினார் ராதிகா
Updated on
1 min read

'சித்தி 2' தொடரிலிருந்து விலகுவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

90களின் இறுதியில் ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த முதல் தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது ‘சித்தி’ தொடர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் 2-ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ஜெயலட்சுமி, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்தத் தொடரை ராதிகாவின் ராடான் டிவி நிறுவனமே தயாரித்து வருகிறது. தற்போது இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

"மகிழ்ச்சியும் கொஞ்சம் சோகமும் கலந்த ஒரு மனநிலையில் இருக்கிறேன். 'சித்தி 2' மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது சிறப்பான வருடங்களையும், கடின உழைப்பையும் சன் டிவியில் தந்திருக்கிறேன். அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், உடன் நடித்தவர்களிடமும் சோகத்துடன் விடை பெறுகிறேன்.

ஆனால், நிகழ்ச்சி தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள். எனது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு என் அன்பு. நிபந்தனையில்லாத அன்புக்கும், விஸ்வாசத்துக்கும் நன்றி. தொடர்ந்து 'சித்தி 2'வைப் பாருங்கள். எனது சிறந்த வெளிப்பாடு இனிமேல் தான் வரவுள்ளது".

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ராதிகா. அப்போது விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று ராதிகா தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in