

'இது நம்ம ஆளு' படத்துக்காக விரைவில் சிம்பு - ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று படமாக்கப்பட இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்துக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட 'பசங்க 2' திரைப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாடல் இடம்பெறுவது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் டி.ராஜேந்தர் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டி இருக்கிறதாம். விரைவில் சிம்பு - ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட பாடல் ஒன்றை காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து இப்பாடலுக்கான பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.
இப்படத்துக்கான இசை உரிமைக்கு இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. 'இது நம்ம ஆளு' படத்தை எப்போது வெளியிடலாம் என்று விநியோகஸ்தர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனம்.